தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக இருக்கக்கூடிய திருச்சியில் விமான நிலையமானது செயல்பட்டு வருகிறது. இந்த திருச்சி விமான நிலையத்தில் தமிழகம், உள்நாடு, மற்றும் வெளிநாடுகளுக்கு விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையானது இயக்கப்படும் என்று விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருச்சி - சென்னை விமான சேவை
திருச்சி - சென்னை நேரடி விமான சேவையானது மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் air india express சார்பில் அறிமுக சலுகையாக திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 2,380 ரூபாய்க்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கு 2,450 ரூபாய்க்கும் டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் Air india express
டிக்கட் முன்பதிவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சேவைக்கு பயன்படுத்தப்படும் விமானமானது புதிய போயிங் 737 மேக்ஸ் வகை விமானம், மிகவும் வசதியான பிஸினஸ் வகுப்பு இருக்கைகள், அதாவது இரண்டு வரிசைகளுக்கு இடையே உள்ள இருக்கைகளுக்கான தூரம் 3 அடி 2 அங்குலம். இருக்கையின் அகலம் 1 அடி 9 அங்குலமாக இருக்கும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சொகுசு பயணம்
அதேபோல் ½ அடி வரை சாயும் இருக்கை அமைப்பு என சொகுசாக பயணம் செய்யலாம். பிஸினஸ் வகுப்பில் சிற்றுண்டி மற்றும் தேனீர் இலவசமாக வழங்கப்படும். அதே போல் மற்ற விமானங்களின் எகனாமி வகுப்பு இருக்கைகளை விட வசதியான எகனாமி வகுப்பு இருக்கைகள், இதில் இரண்டு வரிசைகளுக்கு இடையே உள்ள இருக்கைகளுக்கான தூரம் 2 அடி 6 அங்குலமாக இருக்கும்.
இருக்கையின் அகலம் 1 அடி 5 அங்குலம் ஆகும். அதேபோல் 3 அங்குலம் வரை சாயும் இருக்கை அமைப்பு என செளகரியமாக மக்கள் அனைவரும் பயணம் செய்யலாம். வந்தே பாரத் ரயிலுக்கான கட்டணம், ஆம்னி பேருந்துகள் கட்டணம் போல் விமான கட்டணமும் இருப்பதால் இதில் முன்பதிவு செய்ய மக்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். இதனால் பயணிகள் தங்களின் பயண நேரம் குறையும் எனவும் குறித்த நேரத்தில் செல்லலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.