Chennai Nellai Vande Bharat: சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது. வரும் 25-ஆம் தேதி முதல் பயணிக்க, ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


சென்னை - நெல்லை:


தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24-ஆம் தேதி (நாளை) முதல் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் இருந்து திருச்சி, விருதுநகர் வழியாக திருநெல்வேலி வந்தடைந்தது. வந்தே பாரத் ரயிலை கண்டதும் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.  இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் சென்னை எழும்பூர் வந்தடைகிறது.  மறுமார்க்கத்தில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.


இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக 160 கி.மீ தூரம் தள்ளி உள்ள விழுப்புரத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 160 கி.மீ தூரமுள்ள திருச்சியிலும் தான் நிற்கும். அதேபோல, அதற்கு அடுத்து 105 கி.மீ தூரமுள்ள திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகரில் நிற்கும். ஆனால், சென்னை தாம்பரத்தில் நெல்லை வந்தே பாரத் ரயில் நிற்காது என்பது சென்னை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பயணிகள் தாம்பரத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,  தாம்பரத்திலும் நிற்கும் என்று நேற்று தெற்கு ரயில்வே அறிவித்தது.


பயண நேரம்:


அதன்படி, காலை 6 மணிக்கு திருநெல்வேலி இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், விருதுநகருக்கு 7.13 மணிக்கு வந்தடையும். இரண்டு நிமிடம் கழித்து 7.15 மணிக்கு புறப்பட்டு, 7.50 மணிக்கு மதுரைக்கு செல்லும். அதனை தொடர்ந்து 8.40 மணிக்கு திண்டுக்கல், 9.50க்கு திருச்சியும், 11.54க்கு விழுப்புரமும், மதியம் 1.13க்கு தாம்பரமும், 1.50க்கு சென்னை எழும்பூர் செல்லும். இதேபோல, மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மாலை 3.13க்கு தாம்பரமும், 4.39க்கு விழுப்புரமும், 6.40க்கு திருச்சியும், 7.56க்கு திண்டுக்கல்லும், 8.40க்கு மதுரையும், 9.13க்கு விருதுநகரும், 10.50க்கு திருநெல்வேலியும் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒரே நாளில் நெல்லை, சென்னை இடையே பேருந்தில் சென்றடைய முடியாது.  சென்னை டூ நெல்லை சென்றடைய 10 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். ஆனால், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் ஏழு அரை மணி நேரத்தில் செல்வதால் இதற்கு மிகப் பெரிய வரவேற்பு நிச்சயம் இருக்கும்.


கட்டண விவரம்:


சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயிலில் ஏ.சி.சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3,025 ரூபாய். மேலும், இந்த ரயிலில் பயணிகளுக்கு 2 வேளை உணவு வழங்கப்படும். மதியம் மற்றும் இரவு உணவுடன் டீ, காபி, சூப், பிஸ்கட் போன்றவை வழங்கப்படும். இந்த ரயில் பேண்ட்ரி கார் வசதி  இல்லை என்றாலும் ஐஆர்சிடிசி மூலம் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. உணவிற்கும் சேர்த்துதான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக 300 ரூபாயும், எக்சிகியூட்டிவு சேர்கார் பயணிகளுக்கு 370 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது. வரும் 25ஆம் தேதி முதல் பயணிக்க, ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.