கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். 


சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்பதில் கவிஞர் சினேகன், நடிகை ஜெயலட்சுமி இடையே பிரச்சனை எழுந்த நிலையில், ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். 


என்ன நடந்தது..? 


நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி இரண்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இருப்பினும் இவர் மீது அவ்வபோது பண மோசடி புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில், பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் கடந்த 2022ம் ஆண்டு ஜெயலட்சுமி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். 


அந்த புகாரில், ”கடந்த 2015ம் ஆண்டு முதல் பாடலாசிரியர் சினேகன் ஆகிய நான், ‘சினேகம் அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த அறக்கட்டளையின் மூலம் தான் பலருக்கு பல வகையில் உதவியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமியும் ‘ சினேகம் அறக்கட்டளை’ என்ற பெயரில் இணையதளம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நன்கொடை கேட்டு பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் வருவானவரித்துறை நடத்திய சோதனையின்போது இந்த விவகாரம் தனக்கு தெரியவந்ததாக தெரிவித்திருந்தார். 


மேலும், தான் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் தனக்கே தெரியாமல் இணையதளம் தொடங்கி பல நாட்களாக ஜெயலட்சுமி நன்கொடை பெற்று வந்ததாகவும், தனது அறக்கட்டளைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குற்றம் சாட்டி இருந்தார். 


சினேகன் மீது புகாரளித்த நடிகை ஜெயலட்சுமி: 


இந்தப் புகாரைத் தொடர்ந்து, பாடலாசிரியர் சினேகன் தன்மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை ஜெயலட்சுமி அவரது தரப்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


இதனைத் தொடர்ந்து, பாடலாசிரியர் சினேகன், ஜெயலட்சுமி இருவரையும் அழைத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வந்து சமரசம் செய்தனர். இருப்பினும், பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சினேகன் மீண்டும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே, தற்போது நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.