தூத்துக்குடி என்றால் கடல், உப்பு, முத்து, துறைமுகம் என்ற அடையாளங்களும் பாரதியார், வ.உ.சி., கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலும் மக்கள் மனதில் உதிக்கும். ஆனால், இப்போதெல்லாம் தூத்துக்குடி என்றாலே ஸ்டெர்லைட் ஆலையும் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும்தான் நினைவுகளில் நிழலாடுகிறது. 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட காரணமாக இருந்தது ஸ்டெர்லைட் ஆலை. அதுமட்டுமில்லாமல், எண்ணற்றோர் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். சுற்றுச் சூழல் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.  அப்படிப்பட்ட, ஆலையை கடந்த 2018ல் பூட்டி சீல் வைத்தது தமிழ்நாடு அரசு.


ஆலையை மீண்டும் திறக்க தீவிர முயற்சி


5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி செய்துவருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் வரை சென்று நடத்திவரும் ஸ்டெர்லைட், ஆலையை மூடியதால் இந்தியாவின் காப்பர் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து வழக்காடி வருகிறது.


ஒரு தரப்பு மக்களை பயன்படுத்துகிறதா வேதாந்தா நிறுவனம் ?


அதே நேரத்தில், பல்வேறு தந்திரங்களையும் தங்களுடைய பண பலத்தையும் பயன்படுத்தி ஆலையை திறக்க அனைத்து உத்திகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உபயோகித்து வருவதாக பதபதைக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். அந்த பகுதி மக்கள் சிலரை தூண்டிவிட்டு ஸ்டெர்லை ஆலை இல்லாமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புதிய பிரச்னையை உருவாக்கி, ஆலைக்கு ஆதரவான மனநிலையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் தங்களது எதிர்கால வாழ்க்கை சூனியமாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் அவர்கள். ஆனால், அப்படி ஒரு நிலை வந்தால் அதனை எதிர்த்து மீண்டும் களமாடவும் தூத்துக்குடி இளைஞர்கள் தயாராக இருப்பதாக சொல்கின்றனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர்.


இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜனிடம் கேட்டபோது,


’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கவே கூடாது. அந்த நிலைபாட்டில் இருந்து துளியும் பின்வாங்கிட கூடாது. ஏற்கனவே, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமெல்லாம் ஆய்வு செய்து, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கிறது என்ற அறிக்கையின் அடிப்படையில்தான் மூடப்பட்டிருக்கிறது. அதோடு,  தொழில் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. தமிழ்நாட்டில் எந்த மாதிரியான தொழிற்சாலைகளை அனுமதிக்க வேண்டும், அனுமதிக்க கூடாது என்பதை முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது. அதனடிப்படையிலும் சரி, தாமிர உருக்கு ஆலை சுற்றுச்சூழலுக்கு தீவிரமான மாசை ஏற்படுத்துபவை என்ற காரணத்தினாலும் சரி, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.



சுந்தர்ராஜன், பூவுலகு நண்பர்கள் அமைப்பு


’அவசர சிறப்பு சட்டம் இயற்றுக’ – அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்


 இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்கும் நடவடிக்கைகளில் உச்சநீதிமன்றம் இறங்கியிருப்பதால், தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அவசர சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.


காப்பர் உற்பத்தி பின்னடைவு - ஸ்டெர்லைட் நிர்வாகம் சொல்வது உண்மையா ?


ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கிய காப்பரில் 40 %தான் இங்கு பயன்பட்டது. மீதம், 60 % ஏற்றுமதிதான் செய்யப்பட்டது. தாமிர தாதுக்களை ஆஸ்திரேலியா, தாஸ்சானியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடியில் உருக்கி பயன்படுத்துவதால், இந்த உருக்கு ஆலை மூலம் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. தாதுக்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலேயே உருக்காலை அமைத்து காப்பர் உருவாக்காமல், தூத்துக்குடியில் வந்து ஆலையை அமைத்து உருக்கி எடுப்பது எதற்காக ? தமிழக மக்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்பதாலா ? அவர்களுக்கு எந்த சீர்கேடு ஏற்பட்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என திமிரினாலா ? அல்லது எந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டாலும் பணம் கொடுத்து சரிகட்டிவிடலாம் என்ற ஆணவத்தினாலா ?


இப்படிப்பட்ட அபாயகரமான, மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டில் இயங்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றார்’