தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தரமான சாலைகள் உள்ளது. இருப்பினும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய சாலைகளும், பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது. 


கருங்குழி - பூஞ்சேரி சாலை:


சுமார் 1 கோடி மக்கள் வசிக்கும் சென்னையில் இருந்து தினசரி லட்சக்கணக்கான மக்கள் மற்றும் பொருட்கள் சாலை மார்க்கமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணித்து வருகின்றனர். ஆனாலும், சென்னையின் வெளிப்புறத்தில் இருந்து வெளியில் செல்வதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 


இதனால், சென்னை - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சென்னை - தாம்பரம் - திண்டிவனம் சாலையில்  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி - பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 


டெண்டர் கோரிய அரசு:


இந்த புதிய சாலையை அமைப்பதற்கு ரூபாய் 80 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் ஒப்பந்தம் (டெண்டர்) கோரியுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் செங்கல்பட்டிற்கு முன்பாக மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து ஈசிஆரில் உள்ள பூஞ்சேரி வழியாக பெரும்பாலானா வாகனங்களை திருப்பிவிட முடிவு செய்துள்ளனர். 


இந்த சாலை அமைக்கப்பட்டால் சென்னை - தாம்பரம் மார்க்கத்தில் பெருவாரியான அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என்று அரசு நம்புகிறது. தற்போதுள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 


இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சிரமமின்றி சென்னையை விட்டு வெளியே செல்லவும், மீண்டும் சென்னை திரும்பவும் ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.