சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அவசர சட்டத்தின்படி தாம்பரம் மாநகராட்சி உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, தாம்பரம் மாநகராட்சி, காவல் ஆணையரகம் அமையவுள்ளதால் அவற்றுக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக தாம்பரம் சானடோரியத்தில் 9.5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையின்போது சென்னையில் புதிதாக, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன்படி தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களின் கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் மற்றும் அவற்றுக்கான எல்லைகள் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரிகள் அந்தந்த காவல் ஆணையரகங்களில் இம்மாத இறுதிக்குள் பதவியேற்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு செம்பாக்கம் நகராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த தாம்பரம் மற்றும் சேலையூர் சார் - பதிவாளர் அலுவலக கட்டிடத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக ஆணையரக அலுவலகம், வரும் 1-ம் தேதி முதல் செயல்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றன.
இதனிடையே தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு நிரந்தரமாக புதிய கட்டிடம் கட்டவும், காவல் ஆணையரகத்துக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனைக்கு சொந்தமான 9.5 ஏக்கர் நிலத்தில் காவல் ஆணையர் அலுவலகத்துக்கும் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கும் நிரந்தர கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட உள்ளது என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், “தாம்பரம் மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், காச நோய் மருத்துவமனைக்கு சொந்தமான இடம் மட்டுமே வசதியாக இருந்தது.
எனவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த அனைத்து நிலங்களையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காவல் துறைக்கு 5 ஏக்கர் நிலமும் மாநகராட்சிக்கு 4.5 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடம் பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
தாம்பரம் காசநோய் மருத்துவமனைக்கு சொந்தமான இடம் மக்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்