அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டத்தை எதிர்த்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அதிமுகவில் இருந்து நீக்கியபோது, தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இருவருக்கும் சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, ’தேக்குமரத்தை மரங்கொத்தி கொத்திக்கொண்டிருக்கும்போது, மரத்தில் ஒரு சின்ன அதிர்வு ஏற்படுமாம், அதை பார்த்த அந்த மரங்கொத்தி, இந்த மரத்தையே தான்தான் சாய்த்துக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொள்ளுமாம், அதேபோலதான் நாங்கள் இல்லையென்றால் அதிமுக கூட்டணியே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார்’ என்று கதை சொன்ன புகழேந்தி, அதிமுகவில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.
ஒபிஎஸ்-சை நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்றும், அரசியலில் அவருக்கு செல்வாக்கு இல்லை எனவும் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்து பிரஸ் மீட் வைத்த புகழேந்தியைதான் அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டனர்.
இதில் சுவாரஸ்சியமான விஷயம் என்னவென்றால் ஒபிஎஸ்க்கு ஆதரவாக பேசிய புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்க ஒ.பன்னீர்செல்வமே கையெழுத்திட்டதுதான். எதற்கு புகழேந்தியை நீக்க வேண்டும் என்று கேட்ட ஒ.பன்னீர்செல்வத்தை, அவரை நீக்க வேண்டும் என்பது நிர்வாகிகளின் பெரும்பான்மையான முடிவு, நீங்கள் கையெழுத்து போட்டுத் தான் ஆகவேண்டும் என்று சொல்லி, கையெழுத்து வாங்கி நீக்கியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
எங்கு சென்றாலும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போகிறேன், பத்திரிகையாளர்கள் எல்லாம் வந்துவிடுங்கள் என மெசேஜ் தட்டிவிடும் புகழேந்தி, செய்தியாளர் சந்திப்பில் தன் இஷ்டத்திற்கு கருத்துகளை வாரி இறைத்துக்கொண்டிருப்பார். இதனை அவர் மீண்டும் கட்சியில் சேர்ந்ததில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, அவரை கட்டம் கட்டி தூக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தது. அப்போது, கூட்டணியில் இருக்கும் பாமகவிற்கும் அன்புமணி ராமதாசிற்கும் எதிராக, கட்சியின் அனுமதியின்றி கருத்துகளை உதிர்த்ததாக சொல்லி கட்சியில் இருந்து அவரை நீக்கியிருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற புகழேந்தி, ஓபிஎஸ்தான் கட்சிக்கு சிறந்த தலைமை. தென்மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அதிமுக தோற்றதற்கு, பாமகவின் கோரிக்கையை ஏற்று, உள் இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அறிவித்ததே காரணம் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pugalendhi Interview : அண்ணாநகர்ல இருந்து ஆர்டர் வரும், எடப்பாடி அப்படியே செய்வார் - புகழேந்தி