சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தாஸ் என்பவர் பள்ளி மாணவியை, கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாஸ் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”சென்னையை சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்பவரிடம் வாங்கிய செல்ஃபோன் சார்ஜரை திரும்ப அளிப்பதற்காக சென்றார். அப்போது மாணவியை கத்தி முனையில் மிரட்டி தாஸ் பாலியல் பலத்காரம் செய்துள்ளார். மேலும், மீண்டும் அந்த மாணவியை தாஸ் தொந்தரவு செய்துள்ளார். நடந்ததை மாணவி தனது தாயிடம் கூறியதை அடுத்து, போலிசிடம் புகார் அளிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தாஸ் சாகும் வரை சிறையிலிருக்க வேண்டுமென ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏழு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, அபராத தொகையையும் சேர்த்து மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மாணவிக்கு வழங்க உத்தரவிட்டார்”.
முன்னதாக, பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் காசிக்கு, சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி ஆபாச வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பின்னர் அவர்களின் வீடியோ மற்றும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்தார். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் அளித்த புகாரில் 2020-ம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களில் 120 பெண்களின் 400-க்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் 1900-க்கும் மேற்பட்ட ஆபாச போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, காசி மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டு, நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இயற்கை மரணம் அடையும் வரை காசிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.