பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற 17 பேர் உட்பட கராத்தேயில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கும் காஞ்சிபுரத்தில் மேயர் தலைமையில் பாராட்டு விழா  நடைபெற்றது.

 

கராத்தே போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா

 

காஞ்சிபுரம் ( kanchipuram News ) : காஞ்சிபுரம் செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய அளவிலான இஷின்டிரியூ கராத்தே அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா,கறுப்பு பட்டை விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா, கராத்தே பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா ஆகியன நடைபெற்றது. விழாவிற்கு காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்து பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கி பேசினார்.



 

59 நொடிகளில் 151 ஓடுகள்

 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் கடந்த 21.5.23 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான இஷின்டிரியூ கராத்தே அமைப்பு சார்பில் நடைபெற்ற போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 பேர் தங்கம்,13 பேர் வெள்ளி,13 பேர் வெண்கலம் பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் விழாவில் வழங்கப்பட்டது. இதனையடுத்து கராத்தேயில் கறுப்புப் பட்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 42 பேருக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன.

 

முன்னதாக தலைமைப் பயிற்சியாளர் நூர் முகமது பார்வையாளர் முன்னிலையில் 59 நொடிகளில் 151 ஓடுகளை தலையில் அடித்து உடைத்த சாகச நிகழ்ச்சி உட்பட பல்வேறு கராத்தே வீரர்களின் சாதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



 

இதில் இஷின்டிரியூ கராத்தே அமைப்பின் பொதுச் செயலாளரும், தலைமைப் பயிற்சியாளருமான நூர் முகமது வரவேற்று பேசினார். விழாவில் காஞ்சிபுரம் வேலம்மாள் போதி கல்வி நிறுவன முதல்வர் எஸ்.சுரேஷ் குமார், அன்னி பெசன்ட் பள்ளியின் செயலாளர் ஜி.டி.சேரன், டாக்டர்.எம்.செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு பதக்கம் பெற்றவர்களை பாராட்டிப் பேசினார்கள்.