"சுமார் 3,100 கோடி ரூபாயில், சென்னையின் ஒன்பது குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது"
சென்னை குடிநீர் தேவை
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிக அளவு வேலைவாய்ப்புகள் நிறைந்திருப்பதால், சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 பட்ஜெட்டில் அறிவித்த குடிநீர் திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் குடிநீர் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றிச் சீராக வழங்க, நகரின் 9 முக்கிய குடிநீர் ஆதாரங்களை (Water Sources) ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்காக "ரிங் மெயின் சிஸ்டம்" (Ring Main System - RMS) என்ற புதிய திட்டத்திற்குத் தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட திட்டம்
சென்னையின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய மிக முக்கிய திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இதை செயல்படுத்துவதற்காக சுமார், ரூ.3,108.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) கடன் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னையின் 9 குடிநீர் ஆதாரங்கள் மற்றும் வரவிருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஆகியவை 98 கிலோமீட்டர் நீளமுள்ள இரும்பு (Mild Steel) குழாய்கள் மூலம் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் ?
நகரம் முழுவதும் ஒரு வட்டப் பாதை (Closed Loop) போன்ற குழாய் கட்டமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் எந்த ஒரு நீர் ஆதாரத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மற்ற ஆதாரங்களில் இருந்து நீரைத் திருப்பி விட்டு தடையின்றி வழங்க முடியும், இதனால் சென்னை மாநகராட்சி குடிநீர் தங்கு தடை இன்றி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
தற்போது சென்னை நகரில் நாளொன்றுக்கு 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 2057-ஆம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை தேவையைக் கருத்தில் கொண்டு, நாளொன்றுக்கு 1,762 மில்லியன் லிட்டர் நீரை கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவியில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இத்திட்டம் SCADA (Supervisory Control and Data Acquisition) எனப்படும் தானியங்கி கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். நீரின் அழுத்தம், குழாயில் நீரின் ஓட்டம் மற்றும் தரம் ஆகியவற்றை சென்சார்கள் மூலம் உடனுக்குடன் கண்காணிக்க முடியும். இத்திட்டப் பணிகள் அடுத்த 4 ஆண்டுகளில் நிறைவடையும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.