‘பராசக்தி’ படத்தை பார்க்காமல் அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததை பாஜக பயன்படுத்திக்கொண்டதாக திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார் கூறியுள்ளார். டெல்லியில் அமைச்சர் எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழு கலந்துகொண்டதை அடுத்து அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ இந்தி திணிப்புக்கு எதிரான திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 60களில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடும் படமாக உருவாகியுள்ளது ஒரு பக்கம் வரவேற்கப்படுவதாகவும் ஒரு பக்கம் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. காரணம் அந்தப்படத்தில் காங்கிரஸ் அரசை விமர்சித்திருப்பதால், கூட்டணி கட்சியான திமுகவே இந்தப்படத்தை எப்படி எடுத்திருக்கலாம் என்று பேசி வருகிறார்கள்.
இந்தப்படத்தை திராவிடத்தை பின்பற்றும் பலர் பாராட்டி வந்தாலும், படம் வெளியான நாள்முதல் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், இந்தப்படத்தை பார்த்து காசை செலவு செய்யமாட்டேன் என்று கூறியிருந்தார். அதன்பிறகு, காங்கிரஸ் உறுப்பினர் சிலர் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாகவும், பராசக்தி படத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில், பராசக்தி படக்குழுவும் பங்கேற்றதுதான், தற்போது தமிழக அரசியலில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக எம்பி மாணிக்கம் தாக்கூர், சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு உள்ளது. ஆனால், ஜனநாயகனுக்கு தடைபோட்டுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.
இதற்கு திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார், படமே பார்க்காத சில காங்கிரஸ் தோழர்கள். இந்த படம் காங்கிரஸ்ற்கு எதிராக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட படம் என பதிவிட்டதின் விளைவு. அதை பாஜக பயன் படுத்திகொண்டது. நம்மலே அவங்களுக்கு கன்டெண்ட் எடுத்து கொடுத்துட்டு பொலம்பி என்ன பயன்” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ‘பராசக்தி’ பரப்புரை படம் இல்லை; நான் பரப்புரையும் செய்யவில்லை என்று டெல்லியில் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். இந்தப் படத்தால் எந்த சர்ச்சையும் இல்லை; மக்கள் படத்தை சரியாக புரிந்து கொண்டுள்ளதாகவும் படத்தில் நாங்கள் கூடுதலாக எதையும் சேர்க்கவில்லை என்றும் கூறினார்.
