ஊரடங்கு எதிரொலியாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியாக தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.

 

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக வருகின்ற திங்கட்கிழமை முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

சில அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூட வேண்டும் அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் உள்ளிட்டவை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது. 



அதன் எதிரொலியாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருக்கும் சென்னை திருச்சி-தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மூலமாகவும் அதிக அளவில் செல்கின்றனர்.



 

தமிழக அரசு சார்பில் போதிய பேருந்து இயக்கிய போதிலும் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. மக்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனம்,கார் உள்ளிட்ட வாகங்களின் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலை நிரம்பி வழிகிறது. அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் அதில் போதிய திருப்தி கிடைக்குமா என்கிற சந்தேகத்தில் பொதுமக்கள் பலர் தங்களின் சுய வாகனங்களை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். 

 



அதிக அளவில் கார் மற்றும் பைக் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருவதால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. இரண்டு வாரம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கருதி இந்த முடிவிற்கு பெரும்பாலானோர் வந்துள்ளதாக தெரிகிறது.

 



அதற்கு ஏற்றார் போல பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் சூழலை ஏற்படுத்தியிருப்பதால் உடனே ஊர் திரும்பும் முயற்சியில் பலரும் இறங்கியுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை போல சென்னையில் வீடுகள் பல காலியாக வாய்ப்புள்ளது.