சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் மண்டல வானிலை ஆய்வு மையம், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைமை அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மாநிலங்களுக்கும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் மண்டல அலுவலகமாக செயல்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாநில ஆய்வு மையங்கள் வானிலை முன்னறிவிப்புகளை அந்தந்த மாநிலத்தின் மொழியில் வழங்கும் படி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதே போல், தமிழ்நாட்டிற்கான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழில் வழங்கி வந்தது.
மாற்றியமைக்கப்பட்ட இணையதளம்:
இந்நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரபூர்வமான இணையதளம், https://mausam.imd.gov.in/chennai/# அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையதின் வலைத்தளம் போல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரே நாடு ஒரே இணையதளம் என்ற அடிப்படையில் மாற்றி அமைப்பதாகவும் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
வானிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி:
முன்பு இருந்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் வலைத்தளம், முழுவதும் தமிழில் இருக்கும். அதே வேளையில் மற்ற மொழியினர் முன்னறிவிப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கும். தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய வலைத்தளம் முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆனால் தமிழில் குறிப்பிட்ட முன்னறிவிப்பு சேவைகள் மட்டுமே உள்ளன. முழுவதுமாக தமிழில் இருந்த வலைத்தளத்தில் தற்போது தமிழ் உள்ள அளவிற்கு ஹிந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு வானிலை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் பல பன்முகத்தன்மைகளை மத்திய அரசு மாற்றி வரும் நிலையில், தற்போது வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்திலும் ஒரே மொழி என்ற அடிப்படையில் ஹிந்தியை கொண்டுவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்