மழை நீர் வடிகாலைப் பொருத்தவரை நாங்கள் முதல்வரின் ஆலோசனைக்கிணங்க, ஐஐடியின் வழிகாட்டுதலின் படி தகுந்த ஆராய்ச்சிகள் அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் இந்த மழைக்கு சென்னையில் நீர் தேங்காது என்று மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.
வரும் செப்டம்பர் இறுதிக்குள் வடிகால் பணிகளை முடிக்குமாறு அனைத்து ஒப்பந்ததாரர்களையும் முடுக்கிவிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் செப்டம்பருக்குள் 80 சதவீதம் நிறைவு பெறும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவும் தெரிவித்திருந்தார். கடந்த முறை புளியந்தோப்பு பகுதியில், மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அங்கு தண்ணீர் தேங்காது. அந்தப் பகுதியில் எல்லாம் கிட்டத்தட்ட 90 சதவீத பணிகளை முடித்துவிட்டனர். அதுபோல பணிகள் முடிந்த இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை. கடந்தாண்டு போல இருக்காது. வழக்கமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும், அதை மோட்டார் மூலம் ஓரிரு சரி செய்துவிடுவோம். அடுத்த ஆண்டு சென்னை முழுவதும் சரியாகிவிடும் என்று கூறியிருந்தார்.
இன்று கூட அவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த ஆண்டு சென்னையில் மழை நீர் தேங்காது என்று உறுதியளித்திருக்கிறார்.
மாநகராட்சி அறிக்கை:
சென்னையில், மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று (செப் 1) ஆய்வு செய்தார். இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் .ககன்தீப் சிங் பேடி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-64க்குட்பட்ட வீனஸ் நகர் முதல் பிரதான சாலை மற்றும் 200 அடி சாலை, டெம்பிள் பள்ளி சந்திப்பில் ரூ.4.28 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-65க்குட்பட்ட பூம்புகார் நகர் 5வது தெரு மற்றும் முதல் பிரதான சாலை, கொளத்தூர் பிரதான சாலை (கிழக்கு மற்றும் தெற்கு மாதா தெரு) மற்றும் பேப்பர்மில்ஸ் சாலை (லட்சுமி அம்மன் கோயில் சந்திப்பு மற்றும் வேலவன் நகர் சந்திப்பு) ஆகிய பகுதிகளில் ரூ.7.92 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-66க்குட்பட்ட வேலவன் நகர் பிரதான சாலை, குமரன் நகர் 80 அடி சாலை மற்றும் தணிக்காசலம் கால்வாய் பகுதிகளில் ரூ.5.58 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வார்டு-68க்குட்பட்ட ஜகநாதன் சாலை மற்றும் எம்.எச். சாலை பகுதியில் ரூ.6.28 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-67க்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலை குறுக்கே மற்றும் எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு பகுதியில் ரூ.13.20 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை உடனடியாக முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர்கள் எ. நாகராஜன், கு. சாரதா, யோக பிரியா , பி. அமுதா, எம். தாவூத் பீ உட்பட பலர் உடனிருந்தனர்.