Chennai Rains Latest News: சென்னையில் கடந்த 22 மணி நேரமாக மழை தொடர்ச்சியாகப் பெய்து வரும் நிலையில், மழைப்பொழிவு இன்னும் கடுமையானதாக மாறும் என்றும் நீண்ட நேரம் பெய்யும் எனவும் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


நேற்று மாலையில் இருந்து சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழையும் சில இடங்கைல் அதி கன மழையும் பெய்யலாம் என்று தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


நாளையும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை


இந்த நிலையில் நாளை (16.10.2024 அன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில் மழையின் அளவும் அடர்த்தியும் நேரமும் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


’’சென்னைக்கு வெளியே திரண்டிருந்த மேகங்கள் ஒன்றிணைந்து வருகின்றன. இவை விரைவில் வலுப்பெற்று, நகருக்குள் வரத் தயாராக இருக்கின்றன. இது சென்னையை இன்னும் கடுமையான மழைக்கு அழைத்துச் செல்லும். 


கடந்த 6 மணி நேரங்களில் சென்னையின் சில இடங்கள் 150 மி.மீ. மழையைத் தாண்டிவிட்டன. குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் இப்படி நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் இருந்து பல இடங்களில் மழைப் பொழிவு 200 மி.மீ.-ஐத் தாண்டியுள்ளன.


நீண்ட மழை


வரவிருக்கும் மழை நீண்டதாக, நெடு நேரம் பெய்யும் என தெரிகிறது, நள்ளிரவில் இருந்து 250 மி.மீ. மழையை, குறிப்பாக வட சென்னை பகுதிகளில் தாண்டுவோம் என்று நினைக்கிறேன். இரவு நெருங்கி வரும் சூழலில், ​​மேகங்கள் மேலும் வலுவடையும்!






போன் மற்றும் லேப்டாப்புக்கு சார்ஜ் கட்டாயம் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.


வீட்டில் தண்ணீருக்கு மோட்டர் போட்டு வைத்து விடுங்கள். கண்டிப்பாகத் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்’’.


இவ்வாறு தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.