கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் நோய் பரவல் மிகவும் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 27397 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். அத்துடன் 241 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
அத்துடன் கொரோனா நோய் பரவல் தொடர்பாக பல்வேறு வழிகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே காவல்துறையினர் ஒரு விழிப்புணர்வு நடனத்தை செய்துள்ளனர். அதற்கு இணையதளத்தில் வைரலாக உள்ள 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலை தேர்வு செய்துள்ளனர். அவர்களின் விழிப்புணர்வு நடனம் ட்விட்டரில் அதிக கவனம் பெற்று வருகிறது.
முன்னதாக கேரள காவல்துறை சார்பில் அங்கு கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக ஒரு நடனம் ஒன்று செய்யப்பட்டது. அதிலும் இதே பாடல் பயன்படுத்தப்பட்டது. எனினும் அதிலிருக்கும் வரிகள் மலையாளத்தில் மாற்றப்பட்டு கொரோனா தடுப்பு முகக்கவசம் அணிவது போன்ற வரிகள் அதில் இடம்பெற்று இருந்தன. அந்த வீடியோ கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் மிகவும் வைரலானது. தற்போது அதை தொடர்ந்து தென்னக ரயில்வே காவல்துறையினரும் இதே பாட்டை எடுத்து விழிப்புணர்வு நடனத்தை செய்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் நாளை காலை 4 மணி முதல் வரும் 24-ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.