பாலியல் குற்றம்சாட்டப்பட்ட சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனை தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர். புகாரையொட்டி பள்ளி நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.



சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார்.

அதில், “நீங்கள் என் பள்ளியின் முன்னாள் மாணவி எனத் தெரிகிறது. நானும் உங்களைப் போல வணிகவியல் மாணவிதான். உங்களிடம் ஒரு புகார் அளிக்க வேண்டும். எங்களது ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பில் பல்வேறு மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகிறார். இது ஒருகட்டத்தில் எல்லைமீறி எனது தோழியை சினிமாவுக்கு அழைக்கும் வரை சென்றுவிட்டது. வகுப்பு குழுக்களில் ’பார்ன்’ வீடியோ லிங்க்களைப் பகிர்கிறார். இதுகுறித்து எங்கள் துறைத் தலைவரிடம் புகார் அளித்தும் எந்தவிதப் பயனும் இல்லை. அதனால் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம். இதுபோல நீங்கள் படித்த சமயத்திலும் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகப் புகார் எதுவும் எழுந்துள்ளதா எனத் தெரியப்படுத்துங்கள். எங்களது சீனியரும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. க்ருபாளி அந்தப் புகாரைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீதான மேலதிக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு வலுத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த அழுத்தத்தை அடுத்து நிர்வாகம் தற்போது அவரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Also Read :பாலியல் குற்றச்சாட்டு; ‛பள்ளி நிர்வாகம் நியாயமான நடவடிக்கை எடுக்கும்’ - பத்ம சேஷாத்ரி பதில்