Chennai Port-Maduravoyal Double Decker Expressway: சென்னை மதுரவாயல் - துறைமுகம் சாலை நாட்டிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்காக அமையவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.


 






இதுகுறித்து நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் தீரஜ்குமார் கூறுகையில், “மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமையவுள்ளது. சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை(DPR) மூன்று மாதத்தில் நிறைவடையும். எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  முதல் தளத்தில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வாகனங்கள் செல்லும் வகையிலும், இரண்டாம் தளத்தில் மதுரவாயலில் இருந்து நேரடியாக துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர் போக்குவரத்தும் இருக்கும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்(NHAI) நிதியில் கட்டப்பட உள்ளது” என்று கூறினார்.


மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு கூவம் நதிக்கரையோரம் தூண்களை அமைத்து பறக்கும் சாலையை அமைக்கும் இத்திட்டத்திற்கு 1,468 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் 2011ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு 1,815 கோடியாக உயர்த்தப்பட்டது


ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு கூவம் நதிக்கரையோரம் தூண்கள் அமைக்கப்பட்டு கட்டுமானங்கள் நடந்த நிலையில் 2011ஆம் ஆண்டு புதிதாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சுற்றுசூழல் காரணங்களை காட்டி 2012ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு தடை விதித்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கூவம் ஆற்றின் கரைகளில் தூண்கள் அமைக்கப்படுவதால், வெள்ள காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதே  நீதிமன்றத்தில் தமிழக அரசு எடுத்து வைத்த முக்கிய வாதங்களாக இருந்தது.


2015ஆம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போதும் கூவம் நதிக்கரையில் பறக்கும் சாலைக்காக அமைக்கப்பட்ட தூண்களில் எந்த பாதிப்பும் ஏற்படாததை சுட்டிக்காட்டி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அன்றைய திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையையும் விடுத்திருந்தார்.








 

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டம் 2,400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

 

2018ஆம் ஆண்டு மே மாதத்தில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கான தடையில்லா சான்றையும் தமிழக அரசு அளித்திருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இத்திட்டத்தில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தார் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. 4 வழிப்பாதையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த பறக்கும் சாலை திட்டம் 6 வழிப்பாதையாக மாற்றப்பட்டு ஈரடுக்கு பாலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இதற்கான திட்டமதிப்பீடாக 5,000 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.


பறக்கும் சாலை திட்டத்தை ஈரடுக்கு பாலமாக மாற்றுவதை கண்டித்தும் எந்த மாற்றமும் செய்யாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்ததுடன், திமுக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.