சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 


தினசரி வாழ்க்கையில் பல காரணங்களுக்காக வாகனங்களில் விரைந்து செல்லும் நாம் பல நேரங்களில் முக்கியமான தருணங்களில் போக்குவரத்து சிக்னலில் மாட்டிக் கொண்டு அல்லல்பட நேரிடும். குறிப்பாக அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் நிலை இத்தகைய போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் அவ்வளவுதான். சில நொடிகள் தொடங்கி 2 நிமிடங்கள் வரை போக்குவரத்து சிக்னலில் காத்திருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். 


இப்படி வாகன ஓட்டிகள் அவதியுறுவதை தடுக்கும் பொருட்டு சிக்னலில் காத்திருப்பவர்களை மன மகிழ்வை ஏற்படுத்தும் வகையில், சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களும், சில இடங்களில் கரோக்கி இசையும் ஒலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் தங்கள் டென்ஷன் மறந்து பாட்டை ரசிக்க தொடங்கி விடுகிறார்கள். சென்னையில் அமலில் இருந்த இந்த முறை வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்பாட்டு வந்தது. 


கடும் எதிர்ப்புகள்


காவல்துறையின் இந்த செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்தது. அதேசமயம் சாலை விதிகளை பின்பற்றுதல், ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு போன்ற வாசகங்களும் இசையின் நடுவே ஒலித்து வந்தது. அதேசமயம் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஏற்கனவே காற்று மாசு, வாகன இரைச்சலால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பாடல் ஒலிக்கும் முறை இன்னும் கொடுமையாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்தனர். 


மேலும் சில இடங்களில் போலீசாரை அணுகி பாடல்களின் சத்தத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றார். தொடர்ந்து அவர் பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், காவலர்கள் பணி  நேரத்தின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், சென்னையில் முக்கிய சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். ஒலி மாசுபாடு ஏற்படுவதால் பாடல்களை ஒலிக்க விட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சிக்னலில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.