சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் சரவணன். 41 வயதான இவர் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய சகோதரனான சரவணனைக் மர்மக் கும்பல் கடத்திவிட்டதாகவும், சரவணனின் கார் மற்றும் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துச்சென்றுவிட்டதாகவும் அவரது சகோதரன் முத்துகுமரன் போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மாம்பலம் போலீசார் சரவணனின் காரை சிசிடிவி மூலம் கண்காணிக்கத் தொடங்கினர்.


மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கார் எங்கெல்லாம் பயணிக்கிறது என சாலைகளில் உள்ள சிசிடிவிகளை வைத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்தே வந்தனர். அப்போது சரவணனை கடத்தியகும்பல் சொகுசு காரில் ஓஎம் ஆர் சாலையில் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு அப்பகுதி உஷார் நிலையில் கொண்டுவரப்பட்டது. அப்போது காருக்காக காத்திருந்த போலீசார் சரவணனைக் கடத்திய கும்பலை மாமல்லபுரம் அருகே மடக்கிப் பிடித்தனர்.


கைது..


தொழிலதிபரை கடத்திய மயிலாடுதுறையைச் சேர்ந்த சவுடு மணம் ஒப்பந்தக்காரர் ஆரோக்கியராஜ், கார் ஓட்டுநர் அரவிந்த்,  சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பிடெக் மாணவர் அப்ரோஸ், மதுரை கல்லூரியில் படிக்கும் அஜய், விஜயபாண்டி, கோவை மத்திய சிறையில் பணியாற்றும் சிறை காவலர் நாகேந்திரன்  ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள், கத்திகள், துப்பாக்கிகள், பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.





ஷாக் வாக்குமூலம்..


கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை குற்றவாளிகள் தெரிவித்தனர். இந்த கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக பெண் மருத்துவர் ஒருவர் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.


டாக்டர்..


சரவணனும், சவுடு மணல் ஒப்பந்தக்காரர் ஆரோக்கியராஜும் நண்பர்களாக இருந்துள்ளனர். தொழிலதிபர் சரவணனுக்கு பல முக்கியப்புள்ளிகள் நண்பர்கள் என்பதால் சவுடு மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை வாங்கித்தருவதாக ஆரோக்கியராஜிடம் தெரிவித்துள்ளார். இதற்காக அவரிடம் இருந்து ரூ. 4.50 கோடி பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை வாங்கிவிட்டு ஒப்பந்தம் தொடர்பாக எந்த வேலையையும் சரவணன் செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனால் சரவணனுக்கும், ஆரோக்கியராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க நைட் கிளப்பில் சரவணனுக்கு பெண் டாக்டர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.




அவருக்கு சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்தும், பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். சரவணன் மூலம் ஆரோக்கியராஜும் அந்த பெண் மருத்துவருக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இப்படியாக மூவரின் நட்பும் சென்றுகொண்டிருக்கையில்தான் சவுடு மணல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒருநாள் பெண் மருத்துவரை பார்த்த ஆரோக்கியராஜ் சரவணன் குறித்து புகார் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சரவணன் மீது ஆத்திரத்தில் இருந்த அந்த பெண் மருத்துவர் ஆரோக்கியாஜுடன் இணைந்து சரவணனை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அதன்படியே இந்த கடத்தல் ஐடியாவை கொடுத்துள்ளார். அதன்படி, சரவணனைக் கடத்தில் வைத்து அவரது சகோதரரிடம் பணம் கேட்டு மிரட்டலாம் என ஸ்கெட்ச் போட்டு இந்த கடத்தலை அரங்கேற்றியுள்ளனர்.


இது குறித்து தெரிவித்த ஆரோக்கியராஜ்,  பணத்தை எப்படி வாங்குவது என்றே பெண் மருத்துவரிடம் ஐடியா கேட்டேன். அவர்களுக்குள்ளான பகையை மனதில் வைத்துக்கொண்டு என்னை பயன்படுத்தி அவரை கடத்தியுள்ளார் அவர். இப்போது நான் சிக்கிவிட்டேன் என்றார்.