மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் கலைமாமணி விவேக்கின் நினைவாக அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையின் பெயரானது சின்னகலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


 



                                                                 


மறைந்த நடிகர் விவேக்கின் மனைவியும் அவருடைய மகளும் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விவேக் வீடு அமைந்துள்ள தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். இதற்கு, திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.


 






பிரபல இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் விவேக். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்த விவேக் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். படத்தில் நடிப்பதோடு நிற்காமல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரங்களை நடுதல் உள்ளிட்ட பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.


தொடர்ந்து மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் மீது கொண்ட பற்றால் க்ரீன் கலாம் என்ற ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை செயல்படுத்தி வந்தார். இவரது சாதனைகளை பாராட்டி  கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்ப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 17  ஆம் தேதி திடீரென மாரடைப்பால் விவேக் உயிரிழந்தார்.  



                                                         


அவர் மறைந்ந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில்,  விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவுக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.