வரும் ஜனவரியில் துக்ளக் ஆண்டுவிழாவை நடத்த அதன் ஆசிரியர் குருமூர்த்திக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்து அதிரடி காட்டியிருக்கிறது சென்னை மியூசிக் அகடாமி. கடந்த 10 ஆண்டுகளாக துக்ளக் ஆண்டுவிழா மியூசிக் அகடாமியில் மட்டுமே நடந்து வந்த நிலையில், இந்த அதிரடி முடிவை எடுத்து குருமூர்த்திக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது சென்னை மியூசிக் அகடாமி
என்ன காரணம் ? ஏன் அனுமதி ரத்து..?
பிரபல சங்கீத கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு இந்த ஆண்டிற்கான ’சங்கீத கலாநிதி’ விருதை மியூசிக் அகடாமி அறிவித்திருந்தது. இந்த விருதோடு மறைந்த பின்னணி பாடகி எம்.எஸ். சுப்புலஷ்மி பெயரில் வழங்கப்படும் விருது தொகையான ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும். இந்நிலையில், இந்த விருதை டி.எம்.கிருஷ்ணாவிற்கு அளிக்க துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் இது குறித்து கடந்த 10ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், எம்.எஸ்.சுப்புலஷ்மியை விமர்சனம் செய்த டி.எம்.கிருஷ்ணாவிற்கு அவரது பெயரிலேய விருது வழங்குவது என்பது ’கறிக் கடை காரருக்கு மகாவீரர் பெயரில் விருது வழங்குவது போல’ என்றும் பெரியாருக்கு ஆதி சங்கரர் பெயரில் விருது வழங்குவது போன்றது என்றும் குறிப்பிட்டு, சென்னை மியூசிக் அகடாமியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
கோபமடைந்த மியூசிக் அகடாமி – அதிரடி
இந்த கட்டுரையால் கோபமடைந்த மியூசிக் அகடாமி நிர்வாகிகள் உடனடியாக குருமூர்த்திக்கு வரும் ஜனவரி மாதம் துக்ளக் ஆண்டு விழாவை நடத்த கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்து அதிரடி காட்டியுள்ளனர். தான் இதுபோன்று கடுமையாக விமர்சித்தால், டி.எம்.கிருஷ்ணாவிற்கு வழங்கப்படவிருக்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதை பயந்துகொண்டு மியூசிக் அகடாமி ரத்து செய்துவிடும் என்று குருமூர்த்தி கணக்குப்போட்டிருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக அவரது துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கான அனுமதியையே ரத்து செய்து குருமூர்த்திக்கு மியூசிக் அகடாமி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
மியூசிக் அகடாமிக்கு பதில் நாரதகானா சபா
கடந்த 10 வருடங்களாக துக்ளக் ஆண்டுவிழா சென்னை மியூசிக் அகடாமியிலேயே நடந்து வந்த நிலையில், குருமூர்த்தியின் இந்த கருத்தால் ஆவேசமடைந்துள்ள மியூசிக் அகடாமி நிர்வாகிகள் நிகழ்ச்சியை ரத்து செய்ததை தொடர்ந்து, நாரதகானசபா நிர்வாகிகளை தொடர்புகொண்ட குருமூர்த்தி 2025ஆம் ஆண்டிற்கான துக்ளக் ஆண்டுவிழாவை அங்கு நடத்திக்கொள்ள அனுமதி பெற்றிருக்கிறார்.
இசை கச்சேரிகளை பாமரர்களுக்கு கொண்டுச் சேர்த்தவர் கிருஷ்ணா
ஆடல், பாடல் ஆர்கஸ்டரா போன்ற சினிமா இசை நிகழ்ச்சிகளே சாதாரண பாமர மக்களுக்கு என்றும் கர்நாடக இசை சங்கீத நிகழ்ச்சிகள் என்பது மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே உரித்தானது என்பது போன்றும் நிறுவப்பட்ட கட்டமைப்பை உடைத்து இசை என்பது எல்லோருக்கும் பொதுவானது என கொண்டுவந்தவர்களில் மிக முக்கியமானவர் டி.எம்.கிருஷ்ணா.
சபாக்களில் மட்டுமே நடந்த வந்த கர்நாடக இசை சங்கீத நிகழ்ச்சியை தெருக்களுக்கு அவர் கொண்டு வந்தது பலருக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது என பாமர மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.