பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


பருப்பு, பாமாயில் பற்றாக்குறையா?


இதுகுறித்து அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், "துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக ஒரு நாளிதழில் வந்த தவறான செய்திக்கு ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என்று 14/10/24 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளேன்.


என்னுடைய அறிக்கையைப் படிக்காமல் பருப்பு விநியோகம் தொடர்பாக கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்கள். அவரின் பார்வைக்கு என்னுடைய அறிக்கையை அனுப்பியுள்ளேன்.


அமைச்சர் சொன்னது என்ன?


அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20751 மெட்ரிக் டன்னில் நேற்று (15.10.2024) வரை 9461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.


20408000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 9783000 பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன. மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த ஒரு சில மாதங்களில், நியாய விலைக் கடைகளில் பருப்பு இருப்பு இல்லை என்றும், பாமாயில் அனைவருக்கும் விநியோகிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 


இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், அயோடின் கலந்த உப்பு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 


விவசாயிகளிடமிருந்து வேளாண் பொருள்களை வாங்கி, பாதுகாத்து, அதை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. அதே நேரத்தில், ரேசன் அட்டைகளை மக்களுக்கு வழங்கி ரேசன் கடைகள் வழியாக வேளாண் பொருள்கள் செல்வதை மாநில அரசு உறுதி செய்கிறது.


தமிழ்நாட்டில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் கோதுமையின் இருப்பைப் பொறுத்து, மாதத்திற்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.


இதையும் படிக்க: Madurai: கண்டா வர சொல்லுங்க! மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக சுவரொட்டிகளால் பரபரப்பு !