பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அதில், “2023-24 கல்வியாண்டில் கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு  மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை மாநகர போக்குவரத்து கழக  நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரையிலும் செல்லலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதே போன்று, "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, கவின் கலைக்கல்லூரி, அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி(மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவ / மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-23 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை  நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரைமாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கும்படி அனைத்து  நடத்துனர்களுக்கும் இச்சுற்றறிக்கை வழி உத்தரவிடப்படுகிறது.


இவ்வுத்தரவினை மீறி சீருடையிலுள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இச்சுற்றறிக்கை வழி எச்சரிக்கப்படுகிறது. எனவே, உதவி மேலாளர் (வருவாய் வடக்கு/தெற்கு) இது குறித்து தத்தம் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரியும் போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு தக்கவாறு அறிவுறுத்திடவும், அனைத்து கிளை மேலாளர்கள் தத்தம் பணிமனை நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிய வகையில் அறிவுறுத்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.