தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நவம்பர் 8ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் தொடங்கியது. எனினும் முதல் ஒரு வாரம் மிகப்பெரிய அளவில் மழை இருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாறி மாறி காணப்படுகிறது. இதனிடையே கடந்த நவம்பர் 2ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகர்ந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூட லேசான முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம்,நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சியில் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை (நவம்பர் 6) சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 7ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 8ம் தேதி நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மழை பல பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்யும் என்றும், வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காலம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.