தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 3-ந் தேதி கேரளாவில் தொடங்கியது. அப்போது முதல் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும்  கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் இன்று பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அண்ணாசாலை, தி.நகர், கோயம்பேடு, வடபழனி, அம்பத்தூர், அடையாறு என பல பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகள் முழுவதும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், புறநகரான தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது.




சென்னை மட்டுமின்றி நேற்று மாலை நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


மேலும், நாளையும் கோவை, தேனி, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும், மிதமான மழையும் ஏனைய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  




நாளை மறுநாள் மற்றும் 21-ந் தேதியில் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.


சென்னையைப் பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.