மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் 15 நாட்களில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.


முன்னதாக பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24-ல் அறிவிக்கப்பட்டது. பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகள் களையும் பொருட்டு, மேயர், மாதத்திற்கு ஒரு முறை, ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில், மனுக்களை நேரடியாக பெறும் வகையில் “மக்களைத் தேடி மேயர்” திட்டம் 2023-2024-ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மேயர் பிரியா இன்று மனுக்களை பெற்றார். இதற்காக, மக்களை தேடி மேயர் திட்டத்தின் முதல் குறைதீர்வு கூட்டம் சென்னை ராயபுரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.


புகார் தெரிவிக்க வரும் பொதுமக்கள், தங்களது பெயரை பதிவு செய்து ரசீது பெற்று கொண்ட பின்னர் மேயரை சந்திக்கவும், புகாரினை மாநகராட்சி பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.


இந்தத் திட்டத்தை செயல்படுத்தி பேசிய மேயர், இத்திட்டம் மொத்தம் 8 மாதங்கள் அதாவது டிசம்பர் 2023 வரை செயல்படுத்தப்படும். இந்த 8 மாதங்களில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 நாட்கள் ஒதுக்கப்படும். காலம் குறைவாக இருப்பதாகக் கருதலாம். ஆனால் அனைத்து மண்டலங்களையும் கவனிக்க வேண்டுமானால் 15 நாட்கள் தான் ஒதுக்க இயலும். ஆனால் 15 நாட்களில் அந்தந்த மண்டலங்களில் மக்களின் குறைகள் நிச்சயமாக தீர்க்கப்படும் என்றார்.


இன்று நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, பள்ளிக் கூடத்தில் கட்டிட வசதி, சமுதாயக் கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, குடியிருப்பு வசதி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 401 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. 
இதில் பிறப்பு சான்றிதழ் தொடர்பான 53 மனுக்கள் மீது மாண்புமிகு மேயர் அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், சொத்துவரி தொடர்பான ஒரு மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. 
இதர கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். 


இந்நிகழ்வினையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.


முன்னதாக, இந்த சிறப்பு முகாமில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் மேயர் ஆர்.பிரியாவால் 5 பயனாளிகளுக்கு மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்கள், 17 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், முதலமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.10,000/- வீதம் 10 பயனாளிகளுக்கு காசோலைகளும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000/- வீதம் முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் விதவை உதவித் தொகையும், 10 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்கள், 5 பயனாளிகளுக்கு பழங்குடியினர் இனச் சான்றிதழ்கள், 5 பயனாளிகளுக்கு பட்டா மேல்முறையீடு ஆணைகள், 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ் மேல்முறையீடு ஆணைகள், 5 பயனாளிகளுக்கு காலதாமத பிறப்பு/இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் மேயருடன் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மகேஷ் குமார், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பிகே சேகர் பாபு, ராயபுரம் எம்எல்ஏ மூர்த்தி ஆகியோர் இருந்தனர்.