லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?

தபேதார் சீருடையில் இருக்கும் மாதவி, தனது உதட்டுக்கு லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Continues below advertisement

சென்னை மேயரின் பெண் தபேதார் அதிரடியாக மணலிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு அவர் பணிக்கு வந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. லிப்ஸ்டிக் பூசி பணிக்கு வரக்கூடாது என்று சொன்னதை மீறியதால் இடமாற்றம் செய்யப்பட்டதாக மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.

Continues below advertisement

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக இருந்தவர் மாதவி (50). பிரியா அரசு சம்பந்தமாகச் செல்லும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது இவரும் உடன் இருப்பார். எப்போதும் தபேதார் சீருடையில் இருக்கும் மாதவி, தனது உதட்டுக்கு லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட மாதவி

எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் முன்பு, தபேதார் மாதவி இவ்வாறு இருப்பதை சென்னை மாநகராட்சி அலுவலகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.  அதேபோல உலக மகளிர் தினத்தின்போது ரிப்பன் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஃபேஷன் ஷோவில் மாதவி கலந்து கொண்டது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர், தபேதார் மாதவியை அழைத்து அடர் நிற உதட்டுச் சாயங்களைப் பூசிக் கொண்டு வரக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மாதவி செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

பணிக்குத் தாமதமாக வந்த மாதவி

தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி மாதவி காலையில் பணிக்கு அரை மணி நேரம் தாமதமாக 10.30 மணி வாக்கில் வந்துள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தால் தாமதம் ஏற்பட்டதாக மாதவி கூறும் நிலையில், வேலைக்குத் தாமதமாக வந்ததாகவும் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்ற மறுப்பதாகவும் கூறி மாதவிக்கு அன்றே மெமோ அளிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மாதவி, ’லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவு ஏதேனும் உள்ளதா? அதுபோன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள்’ என்று கூறி உள்ளார். அதையே தமது விளக்கமாகவும் மேயரின் உதவியாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எனினும் மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் அலுவலகம் சொல்வது என்ன?

எனினும் இந்தக் குற்றச்சாட்டை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது. மாதவி, லிப்ஸ்டிக் விவ்காரத்தால் இடமாற்றம் செய்யப்படவில்லை. பணியைச் சரியாகச் செய்யாத காரணத்தாலேயே மெமோ கொடுக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் பெற்றோரான 50 வயது மாதவி, சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement