தமிழகத்தின் தனித்த அடையாளமாக மாறப்போகும் காட்டுப்பள்ளி துறைமுகம்(Kattupalli Port), பெரும் விவாதப் பொருளாகவும் தற்போது மாறியுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் பின்னணி என்ன..? ஒருபுறம் இதனால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன..? மறுபுறம் இதனை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை விரிவாகப் பார்க்கலாம்..


காட்டுப்பள்ளி துறைமுகம்:


இதுவரையில் இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும், 217 சிறிய துறைமுகங்களும் உள்ளன. பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் இந்த துறைமுகங்கள் தான் முக்கிய முதுகெலும்பாக உள்ளன.


கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பணிகள் துவக்கப்பட்டு, 2013ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது காட்டுப்பள்ளி துறைமுகம். திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தின் நிர்வாகம் கடந்த 2018ம் ஆண்டு அதானி துறைமுகம் – சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


விரிவாக்க திட்டம்:


தற்போது இதனை 6,110 ஏக்கரில், 34 சூரிய மின்சக்தி திட்டங்களுடன் விரிவாக்கம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அப்படி விரிவாக்கம் செய்யப்படும் போது, தென்னிந்தியாவிலேயே பிரம்மாண்டமான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட துறைமுகமாக காட்டுப்பள்ளி துறைமுகம் உருவெடுக்கும் என்றும்  மேலும் 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளக்கூடியதாகவும், 15,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை தரக்கூடியதாகவும் திகழும் என்று அதானி துறைமுகம் நிறுவனத்தினர் கூறுகிறார்கள்.


இங்கு கையாளப்படும் சரக்கு பெரும்பாலும் நிலக்கரி மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்ததாக இருக்கும் என்பதால், தமிழ்நாட்டின் மின்வெட்டு பிரச்சனை தீர்வதோடு, பல புதிய தொழிற்சாலைகளுக்கான துவக்கப்புள்ளியாகவும் அது அமையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் எட்டு வழிச்சாலை, ரயில் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் வடசென்னை பகுதியையே நவீனமயமாக்கும் தனித்த அடையாளமாக காட்டுப்பள்ளி துறைமுகம் உருவெடுக்கும். சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படவுள்ள இந்த துறைமுகத்தால், ராணுவ தளவாட பாகங்களை உற்பத்தி செய்யும் மையமாக தமிழகம் உருவாக்க வாய்ப்பு உள்ளது என அதானி நிறுவனத்தினர் தெரிவிக்கிறார்கள். இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த துறைமுகம் இன்னும் 20 ஆண்டுகளில் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எதிர்ப்பு ஏன்?


இந்தநிலையில், சில மீனவ அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் துறைமுகத்தால் ஆபத்து ஏற்படும் என்று எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். தற்போது அதானி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடல் அரிப்புக்கு எதிரான பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படவேண்டும், பொது மக்கள் இடப்பெயர்ச்சி இல்லை என்ற உத்தரவாதம், துறைமுகத்தில் வேலைகள், காட்டுப்பள்ளி மற்றும் பழவேற்காடு இணைப்புக்கு சாலை ஆகியவை மீனவ மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. அரங்கன்குப்பம், கூனங்குப்பம் மற்றும் சாத்தன்குப்பம் ஆகிய குப்பங்களின் மக்கள் முடிவை பொறுத்தே மற்ற மீனவ குப்பங்களின் முடிவு இருக்கும் என்று கூறப்படுகிறது.


மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண துறைமுக நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதானி துறைமுகத்தின் விரிவாக்கத்தில் மக்களின் எதிர்ப்பு குறைந்துள்ளதாகவும், துறைமுகம் வருவதின் மூலம், தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்ற கருத்து அப்பகுதியில் பரவலாகி வருகிறது.  ஒரு பக்கம் எதிர்ப்பு, மறுபக்கம் ஆதரவு என சென்றுவரும் சூழலில், மாசு கட்டுப்பாட்டு வாரிய கருத்து கேட்பு கூட்டத்துக்குப் பிறகு காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.