நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், காற்றின்  திசை வேகமாறுபாடு காரணமாகவும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அடுத்த 3 நாட்களில் இதே நிலை நீடிக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாறு பகுதியில் 13 செ.மீட்டரும், சின்கோனாவில் 11 செ.மீட்டரும், வால்பாறை மற்றும் பாரூர் பகுதியில் தலா  செ.மீடரும் மழை பதிவாகியுள்ளது. 


அடுத்த 4 நாட்களுக்கு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.