விழுப்புரம் மாவட்டம், தனியார் கல்லூரியில், ‘நான் முதல்வன்” திட்டத்தின்கீழ், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கான ‘உயர்வுக்கு படி” வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், ”முதலமைச்சர் மாவட்டந்தோறும் ‘நான் முதல்வன்” திட்டத்தின்கீழ், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி” வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தி, மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் கல்வி மாவட்டம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் ‘உயர்வுக்கு படி’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்வாக, விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 550 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கு ‘உயர்வுக்க படி’ நிகழ்ச்சியின் வாயிலாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது . இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், கல்வி கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணமின்றி கல்வி, புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை, விடுதியில் தங்கி படித்தலுக்கான வழிகாட்டுதல், கல்விக்கடன், முதல்பட்டதாரி சான்றிதழ், கல்வி உதவித்தொகை போன்றவை குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றம் கல்லூரி முதல்வர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது.
கல்வி வாழ்வில் உயர்வுக்கு மிக அவசிமான ஒன்றாகும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தொடர் கல்வியின் மூலம் நம்முடைய இலக்கை எளிதில் அடைய முடியும். கல்வி கற்பதின் மூலம், சமூகத்தில் நல்ல மரியாதை, மன நிறைவான வாழ்க்கை கிடைக்கும். படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை மனமிருந்தால் மார்க்கம் உண்டு, உங்களுடைய ஆர்வமும், தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் உங்கள் வாழ்க்கை இலட்சியத்தினை அடையலாம். குறிப்பாக, பெண்கள் உயர்கல்வி பயின்று என்ன செய்யப்போகிறார்கள் என்ற தவறான புரிதல் சிலரிடம் காணப்படுகிறது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். பெண்களும் உயர்கல்வி பயில வேண்டும். அதன் மூலம், சமூகத்தில் அவர்களுக்கான மரியாதை முழு அளவில் கிடைப்பதுடன், ஒரு பெண் கல்வி பயின்றால் அக்குடும்பமே நல்ல முன்னேற்றம் காண்பதோடு, சமுதாயமும் மேம்பாடு அடைந்திடும். விழுப்புரம் மாவட்டத்தில், 100 சதவீத மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில்சேர்ந்து முன்னோடி மாவட்டமாக வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எனவே, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்கள் அனைவரும் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயின்றிட வேண்டும். தங்களுடைய படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை போன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் இருந்திடும் இவை அனைத்தையும் கடந்து வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும் என அனைவரின் மனதில் தோன்றிட வேண்டும். நீங்கள் கற்கும் கல்வி உங்கள் எதிர்காலத்தினை சிறப்பானதாக மாற்றிடும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘நான் முதல்வன்” திட்டத்தின்கீழ், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிக்கின்ற காலகட்டத்திலேயே வேலைவாய்ப்பும் முகாம் வாயிலாக வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. எனவே, வருகை புரிந்த அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து, தன்னம்பிக்கையினை வளர்த்திட வேண்டும். நீங்கள் இதுகுறித்த விழிப்புணர்வினை மற்றவர்களுக்கு ஏற்படத்திட வேண்டும்” எனத் தெரிவித்தார்.