தமிழகத்தில் 1,167 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாகவும், நாளொன்றுக்கு தமிழ்நாட்டில் 400 டன் மற்றும் புதுச்சேரியில் 150 டன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் தேவை 250 மெட்ரிக் டன் ஆகவுள்ளதால், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு 45 டன் ஆக்சிஜன் அனுப்பியதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது. 


முன்னதாக, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும்  ஆக்சிஜன், ரெம்டிசிவர் தடுப்பு மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்றம் தானாக விசாரிக்கத் தொடங்கியது. மேலும், இன்று மதியம் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் தடுப்பு மருந்து 31 ஆயிரம் டோஸ் உள்ளதாகவும், இருப்பு இல்லாத தனியார் மருத்துவமனைகள், அரசிடம் முறையிட்டால் 783 ரூபாயில் ஒரு டோஸ்  வழங்க தயாராக இருப்பதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். சந்தையில் ஒரு டோஸ் ரெம்டெசிவர் 4,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 


அரசு மருத்துவமனைகளில் உள்ள 9,600 வெண்டிலேட்டர்களில்,  5,887 கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள 6,000 வெண்டிலேட்டர்களில்,  3,000 கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில்  படுக்கை, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் என எதிலும் பற்றக்குறை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், " கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது” என்று குறிப்பிட்டார்.


அனைத்து கருத்துகளையும் பதிவு செய்த நீதிபதிகள், "வெண்ட்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் விரைந்து எடுக்க அரசின் செயலாளர் அல்லது கூடுதல் செயலாளர் அல்லது சார்பு செயலாளர் தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனிடையே, மருத்துவ பயன்பாட்டுக்காக மாநிலங்களுக்கிடையே ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் வாகனங்களை எந்த ஒரு மாநிலமும் தடுத்து நிறுத்தக்கூடாது என்று மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.



 



முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை சார்பில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் இறக்குமதி செய்வதற்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் இறக்குமதி செய்யப்படும் ஆக்ஸிஜன் மாநில அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 11, 681 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 3,750 பேருக்கும், செங்கல்பட்டில் 947 பேருக்கும் கோயம்புத்தூரில் 715 பேருக்கும்  தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை  84,361-ஆக அதிகரித்துள்ளது.