சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள் மதுபானம் பரிமாற உரிமம் அளிப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதா என தமிழக  அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில்  மதுபானங்கள்  பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, சிறப்பு உரிமத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருந்தது. திருமண மண்டபங்களிலும், விளையாட்டு நிகழ்வுகளில் மது பரிமாறப்படுவதற் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கண்டனத்தையும் பதிவு செய்தனர். இதனால், மதுபானம் விதிகளில் சில மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வந்தது. 


அதன்படி, பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டது. எனினும், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து  வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். 


அதன் மீதான விசாரணையில், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பான விசாரணை மீண்டும் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மதுபானம் தொடர்பன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு சட்டமன்றத்தில் ஒப்புதல்பெறாவிட்டால், அந்த விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 


இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை, திருத்த விதிகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தடையாக இருக்காது என்ற நீதிபதிகள், மதுபானம் திருத்த விதிகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா இல்லையா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.