அதிமுக பொதுக்குழு தொடர்பான ஒரு நபர் நீதிபதி ஜெயசந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.


அந்த மேல்முறையீடு மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கபட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியும் கலைக்கபட்டுவிட்டதாகவும், அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில்  நீதிமன்றம் தலையிட முடியாது.


கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல் பெரும்பான்மை உறுப்பினர்களில் விருப்பத்தில் தலையிடுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.


கட்சி ஒற்றை தலைமையை நோக்கி செல்லும் நிலையில் இரட்டை  தலைமை வேண்டும் என்ற ஒரு தனிநபரின் விருப்பத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. உட்கட்சி செயல்பாடு குறித்து நீதிபதி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது நீதிமன்றம் ஆய்வுக்குட்பட்டது அல்ல.


ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளார். இது மனுவில் கேட்கப்படாத கோரிக்கைகளுக்கு நிவாரணமாக தீர்ப்பு வழங்கி உள்ளார். இதற்காகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.


இருவரும் இணைந்து செயல்பட முடியாத ஒரு நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.


எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவும்,  ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனுவும் நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.


அப்போது பன்னீர்செல்வம் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது போல அம்மன வைரமுத்து வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று மேல்முறையீடு மனுக்களிலும் தனி நீதிபதியின் சான்றளிகப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல், விசாரணைக்கு ஏற்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை வைத்தார்.


அதனை ஏற்ற நீீதிபதிகள்,  சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க ஒப்புதல் அளித்ததுடன், மூன்று மனுக்களையும் விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.