Judge Anand Venkatesh: இந்திய தண்டனை சட்டங்களின் பெயரை மாற்றினாலும், அவற்றை இந்தியிலேயே குறிப்பிடுவேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து:


இந்திய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் தண்டனை சட்டங்களின் பெயர் மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, “ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ  ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஐபிசி என்று தான் குறிப்பிடுவேன். ஏனென்றால் எனக்கு இந்தி தெரியாது. எனவே இந்தியில் உள்ள புதிய பெயர்களை சரியாக உச்சரிப்பது எனக்கு கடினமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் வழக்குகளில், பல்வேறு அதிரடியான தீர்ப்புகளை வழங்கி ஆனந்த் வெங்கடேஷ் கவனம் ஈர்த்து வருகிறார். இந்த நிலையில், குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவது குறித்து ஆனந்த் வெங்கடேஷ் பேசி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.


ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கும் வழக்குகள்:


அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லை என ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் கடந்த ஆண்டு வழக்கை ரத்து செய்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில், பொன்முடியின் சொத்துக் குவிப்பு வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், அடுத்தடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்து அதிரடி காட்டினார். அந்த வரிசையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஓபிஎஸ் மற்றும் வளர்மதி ஆகியோரின் பெயர்களும் சேர்ந்தன.


திமுக கோரிக்கை நிராகரிப்பு:


ஆனால், மறு ஆய்வு வழக்குகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விலக வேண்டும் எனவும், வேறு நீதிபதி விசாரிக்கவும் திமுக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உயர் நீதிமன்றக் கிளைக்கு மாற்றப்பட்டதால் சில காலம் இவ்வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனால் விசாரிக்கப்பட்டது. எனினும், ஜனவரி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேசனே இவ்வழக்குகளை மீண்டும் விசாரிக்கிறார்.


உச்சநீதிமன்றத்தை நாடிய அமைச்சர்கள்:


தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு மறு ஆய்வு வழக்குகளின் விசாரணை பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தினசரி அடிப்படையில் நடைபெறும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை  ஜனவரி 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில், உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.