செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சோத்துபாக்கம் மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், கேசவ ராயப்பேட்டை, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார கோரியும் நீர்நிலை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நான்கு கிராமங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வருவாய்த்துறையினர், அளவடி செய்தனர். அளவடி செய்து நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அப்பொழுது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும் போது மாவட்ட ஆட்சியர் பொன்னையா என்பவர் ஆக்கிரமித்து உள்ளது என நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார் . அவ்வாறு குறிப்பிடப்பட்ட ஆய்வில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர்களின் குறித்த விவரங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ராஜா என்பவர் மீண்டும் வழக்குத் தொடுத்து முழு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டுவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கடந்த 2015ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆக்கிரமிப்பு இடத்தில்தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து ராஜா கூறுகையில், நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பதற்காகவே இந்த பொதுநல வழக்கு தொடர்ந்தோம். ஆனால் அப்பொழுது மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா என்பவர் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கிறது என்று கூறினாரே தவிர, யார் அதை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்பது குறித்து கூறவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டது தற்பொழுது நீதியரசர் நியாயமான உத்தரவை பிறப்பித்துள்ளார் என தெரிவித்தார்.