தமிழ் வழி அர்ச்சனைக்கு தடைக்கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


 






 


தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அன்னைத் தமிழ் அர்ச்சனை திட்டத்துக்கு தடை விதிக்க கோரிய  வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. மனுதாரரான 'OurTemples' தனது மனுவில், "தமிழில் அர்ச்சனை செய்வது கடவுளை அவமதிக்கும் செயல். மதச்சார்பற்ற நாட்டில் மதம் தொடர்பான விசயங்களில் தலையிட அரசுக்கு உரிமை கிடையாது" என்று தெரிவித்தார்.   


அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம்:  


தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் "அன்னைத் தமிழில் அர்ச்சனை" செய்யவிருக்கும் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை கடந்த மாதம் 3ம் தேதியன்று வெளியிட்டார். முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழில் வழிபட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” எனும் கொள்கையில் திளைத்த தமிழ் அறிந்த பெருமக்கள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க, தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 18ம் தேதி வெளியிட்டார். இறைவனின் பெருமைகளையும் பதிகம் மற்றும் பாடல்களால் உயர்வாக 'ஒப்புமை செய்து' போற்றுவதற்கு போற்றி நூல்கள் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த முயற்சியின் மூலம், கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ் மொழி மூலம் அர்ச்சனை என்பதால் அகமகிழ்வார்கள். அறிந்த மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர் சொல்வதைப் பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் இந்தப் போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 


உச்சநீதிமன்றம் செல்வோம், மனுதாரர் ட்வீட்: 


மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தனது ட்விட்டர் பதிவில், " தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும்  இந்து கோவில்களில் புதிய வழிபாட்டு முறைகளை (தமிழில் அர்ச்சனை) அறிமுகப்படுத்தியதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தேன். துரதிருஷ்டவசமாக, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்குடன் முற்றிலும் தொடர்பில்லாத முந்தைய வழக்கினை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றம் நிராகரித்தது என்பது எனது தாழ்மையான கருத்து.  இந்த, விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்து செல்வேன்" என்று பதிவிட்டார்.   


மேலும், வாசிக்க:


TN Unique Health ID to all : அனைவருக்கும் ஹெல்த் ஐடி கார்டு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!