அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருச்செங்கோடு தொகுதி முன்னாள்  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது. 


முன்னதாக,கடந்த 1ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், இருவரையும் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.



Caption



 இன்றும், நாளையும்  (3,4ம் தேதி)ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் நாளை தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளனர். இவர்களை எதிர்த்து, கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் எந்த இடை நீக்கமும் செய்யப்படாமல் தொடரும் உறுப்பினர்கள் யாரேனும் இருவர், ஒரே மனுவாக தாக்கல் செய்து, அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், வரும் 7ஆம் தேதி அடிப்படை உறுப்பினர்கள் வாக்கு செலுத்தும் நடைமுறை இருக்கும். 


இவர்களை எதிர்த்து யாரேனும் போட்டியிடவேண்டும் என்றால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர், அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர் என இருவர் சேர்ந்து ஒரே மனுவாக தாக்கல் செய்யவேண்டும். கடந்த காலங்களில் பொதுச்செயலாளர் எப்படி ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதேபோல, ஒரே வாக்கு அடிப்படையில் தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 


ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் இருந்தாலோ, அல்லது தாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டாலோ, அல்லது தாக்கல் செய்துவிட்டு பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டாலோ, வாக்கெடுப்பு நடத்தப்படாமல், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண