சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக விமர்சித்துள்ளார். 


அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு


தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதியமைச்சராக உள்ளார். இவர் கடந்த 2006-2011 ஆம் ஆண்டு இருந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதும், மனைவி மணிமேகலை மீதும்  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு விசாரணை கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலையை  விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். 


கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழக்கு


இதேபோல் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்தார் தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். 2012 ஆம் ஆண்டு அவர் மீதும், மனைவி ஆதிலட்சுமி, மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்ததாக தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


பின்னர் இரு தரப்பு வாதங்களும் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் கடந்த ஜூலை மாதம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனைவி ஆதிலட்சுமி,தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோரை விடுவித்து மாவட்ட மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. 


தாமாக முன்வந்து வழக்கு 


இந்நிலையில் இந்த இரு அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிமன்ற தீர்ப்பை சரமாரியாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மீதான வழக்குகளில் பின்பற்ற நடைமுறை தவறானது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிக்கிறது. ஒரே தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு தேதியை மாற்றி வழக்குகளில் இருந்து சம்பந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர். தீர்ப்பை படித்து விட்டு என்னால் 3 நாட்களாக தூங்க முடியவில்லை. நீதிமன்றம் என்பது கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல, சுப்பனுக்கும் குப்பனுக்கும் உரித்தானது. இவ்வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணை செய்யப்படுகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், லஞ்ச ஒழிப்பித்துறை ஆகியோர் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க  வேண்டும்” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.