இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துகள் பேச கவிஞர் லீனா மணிமேகலை, பாடகி சின்மயிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு லீனா மணிமேகலை தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த பதிவு ஒன்றை எழுதினார். அதில், 'திருட்டுப் பயலே', 'கந்தசாமி' ஆகிய பிரபல படங்களை இயக்கிய சுசி கணேசன் தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார் என்று தெரிவித்திருந்தார்.
அதனைதொடர்ந்து, லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சுசிகணேசன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது தொடர்ந்து இழுத்து அடிக்கப்பட்டதால் விரைந்து இந்த வழக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு பிறகு இயக்குநர் சுசி கணேசன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். சிறிது நாட்களில் பாடகி சின்மயி தாமாக முன்வந்து சுசி கணேசன் மற்றும் அவரிடம் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதனால் சுசி கணேசன், தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத சின்மயி தன் மீது தேவையில்லாமல் பழி சுமத்துவதாக தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோடியே பத்து லட்சத்திற்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல்லா குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, இயக்குநர் சுசி கணேசன் தரப்பில் ஆஜரான வக்கீல், தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயக்குநர் சுசி கணேசன் மீது தவறான கருத்துகளை கவிஞர் லீனா மணிமேகலை, பாடகி சின்மயி பரப்பி வருகின்றனர். இதனால் அவர்கள் சமூக வலைதளங்களில் சுசி கணேசன் பற்றி பேச தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, கவிஞர் லீனா மணிமேகலை, பாடகி சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் இயக்குநர் சுசி கணேசன் பற்றி பேச தடைவிதித்தும், லீனா மணிமேகலை பேட்டியை ஒளிபரப்பு செய்த யூ டியூப் சேனல் மீது நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல்லா குத்தூஸ் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்