தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் பேரணியின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் போலீசாருக்கு எதிராகவும், அப்போதைய தமிழக அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.


மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, “ நாங்கள் மக்களை கொன்று அவர்கள் மீது பணத்தை எறிந்துவிட்டு, எங்கள் வேலை முடிந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? இதுதான் நாம் கட்டி எழுப்ப ஆசைப்பட்ட சமூகமா? சிலரிடம் பணத்தை எறிந்துவிட்டு இங்கு எல்லாம் தள்ளப்படுகிறது.”என்று தனது ஆதங்கமாக கூறினார்.






மேலும், நீதிபதி கூறும்போது, “அரசு தனது போலீஸ் மூலம் நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஆபத்தானது. இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.






இந்த விவகாரத்தில் உண்மைகள் வௌிச்சத்திற்கு வருவதற்கு முன்னர் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த வழக்கில் உண்மைகளை பகிரங்கப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.






மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மை செயலர் அறிக்கை இரண்டையும் சீல் ஈட்ட கவரில் தாக்கல் செய்யவேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.