தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அசோக் நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி, சைதாப்பேட்டை, தி. நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் புறநகர் சென்னையில் ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், தாம்பரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த ஒருவாரத்திற்கு மாலை நேரங்களில் மழைப்பொழிவு இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் வெயில் தணிந்து குளிர்ச்சி மாநகரை ஆட்கொண்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கனமழை பெய்துவருதால் சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியபடி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் சென்னையில் சிந்தாதிரி பேட்டை, ஆதம்பாக்கம், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கே.கே. நகர், திருவான்மியூர், ஓ.எம்.ஆர், ஈ.சி. ஆர்., ஜாபர்கான் பேட்டை, எழும்பூர், எம்.ஜி.ஆர் நகர், சேத்துப்பட்டு, கோயம்பேடு, வடபழனி, சூளை மேடு, போரூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான மொடச்சூர், கரட்டூர், கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் நாமக்கல் மாவட்டம், மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளான குமாராபளையம், பால்மடை, கொல்லப்பட்டி, செங்கோடம் பாளையம், குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்துவரும் மழை அடுத்த ஒருவாரத்திற்கு நீடிக்க அதிக வாய்ப்புள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் நல்ல மழை பெய்துவருவதால் டிவிட்டர் வாசிகள் டிவிட்டர் தளத்தில் சென்னையில் மழை என்பதை ட்ர்ண்ட் செய்து வருகின்றனர்.
அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட தமிழ்நாடு மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தர்மபுரி, தேனி திண்டுங்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.