சென்னையில் நேற்று இரவு முதல் மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் காலையில் பணிக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இதனால், இன்று பள்ளி, கல்லூரிகள் சென்னையில் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை:


இந்த சூழலில், சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முதலில் அறிவித்தார். பின்னர், சென்னையில் தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாகவே மழை அவ்வப்போது லேசான அளவு பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது.


இதையடுத்து, சென்னையில் நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரவு முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.


மற்ற மாவட்டங்கள் எப்படி?


சென்னையில் தொடர்ந்து மழை நீடித்து வரும் சூழலில், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மட்டுமே விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் தற்போது வரை எந்த சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்காததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.