அன்புமணி ராமதாஸ் நாளை கூட்டும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று மாலை, ராமதாஸ் மற்றும் அன்புமணி தனது அறைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார்.

ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாளை, அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ராமதாஸ் தரப்பிலிருந்து, அந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, அவரது ஆதரவாளரான, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், இதை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதற்கு நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ் நேற்று ஒப்புக்கொண்ட நிலையில், அந்த மனு இன்று விசாணைக்கு வந்தது. 

அப்போது, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அன்புமணியின் பொதுக் கூட்ட அறிவிப்பால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ராமதாஸ் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கில் தீர்ப்பு வாங்க 10 நிமிடங்கள் போதும், ஆனால், அவ்வாறு செய்ய தான் விரும்பவில்லை என்று கூறி, ராமதாஸ் மற்றும் அன்புமணியை இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் வருமாறும், இருவரிடமும் தனியாக பேச விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அந்த சந்திப்பு தன்னுடைய அறையில் நடக்கும் என்றும், அப்போது, வழக்கறிஞர்கள், கட்சியினர் என யாருக்கும் அனுமதி இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அன்புமணி தரப்பு வழக்கறிஞர் என்.எல். ராஜா, அன்புமணிக்கு தகவல் அளித்து அவரை வரச் சொல்வதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள், ராமதாசுக்கு தகவல் தெரிவிப்பதாகவும், ஆனால் அவர் நீண்ட தூரத்தில் இருந்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, இப்போதே(வழக்கு விசாரணை நடைபேற்ற பகல் 12.45 மணி) அவர் கிளம்பிவிட்டால், மாலைக்குள் வந்து விடலாம் எனக் கூறினார். தொடர்ந்து, வழக்கை மாலை விசாரிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.

நீதிபதியின் முயற்சி பலிக்குமா.?

இந்த வழக்கின் விசாரணையின்போது பேசிய நீதிபதி, பாமக-வின் நலனை கருதி இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அன்புமணி எந்தவித சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை என ராமதாஸ் கூறியிருந்தார்.

மேலும், இருவருமே தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால் தான் மோதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒருவர் கூட விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில் இல்லை என்பது தெரிகிறது. நேற்று கூட, கட்சியை அன்புமணி கேட்கிறார், ஆனால் நான் தர மாட்டேன் என்று ராமதாஸ் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், தந்தை மகனை சமாதானப்படுத்தும் நீதிபதியின் முயற்சி பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.