தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சியான அதிமுக - பாஜக கூட்டணி செயல்பட்டு வருகிறது. 

எம்ஜிஆர் கார் பதிவெண்ணில் நயினார் பரப்புரை வாகனம்:

சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சூழலில், தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் பிரத்யேக பரப்புரை வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளார். 

அந்த வாகனத்தின் பதிவெண் 4777 ஆகும். இந்த எண் அதிமுக-வைத் தொடங்கியவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் கார் மற்றும் பிரச்சார வாகன எண் ஆகும். 4777 என்பது அதிமுக-வினருக்கு மிகவும் ராசியான எண்ணாகும். எம்ஜிஆரின் தீவிர விசுவாசிகள், தொண்டர்கள், நிர்வாகிகள் இந்த எண்ணை பதிவெண் கொண்ட கார்கள், வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக பல மாதங்கள், ஆண்டுக்கணக்கில் காத்திருந்து பதிவெண் பெற்றவர்களும் உண்டு. 

ஆதங்கத்தில் அதிமுக:

அதிமுக - பாஜகவும் கூட்டணியில் இருந்தாலும் இந்த கூட்டணி அதிமுக-வின் அடிமட்டத் தொண்டர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவே கூறப்படுகிறது. ஏனென்றால், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அவர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியது ஒட்டுமொத்த அதிமுக-வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், திமுக-வை எதிர்த்து கட்சி தொடங்கி, ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் ஜெயலலிதாவும் திமுக-வை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தவர்.

இதனால், தமிழ்நாட்டில் திமுக-விற்கு எதிரான ஒரே கட்சி அதிமுகதான் என்ற பெயர் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த சூழலில், அண்ணாமலையே தமிழ்நாட்டில் பாஜக-தான் எதிர்க்கட்சி என்று பேசியதும் அதிமுக-வினர் மத்தியில் மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. பின்னர், அண்ணாமலையின் தமிழக பாஜக தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகே மீண்டும் அதிமுக பாஜக-வுடன் கைகோர்த்தது. 

எம்.ஜி.ஆர். செல்வாக்கை கைப்பற்ற முயற்சியா?

ஆனாலும், ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி போன்ற அமித்ஷா, அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோரின் பேச்சு அதிமுக-வினர் மத்தியில் தொடர்ந்து அதிருப்தியை உண்டாக்கி வருகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் இல்லாத சமயத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசியிருந்தார். 

அதிமுக-வின் எதிர்க்கட்சி அந்தஸ்தை அபகரிப்பது போல செயல்பட்ட பாஜக, தற்போது அதிமுக-வின் தலைவரான எம்.ஜி.ஆர். பதிவெண்ணையும் தங்கள் பக்கம் எடுத்துக் கொண்டிருப்பது அதிமுக-வினர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக-வினர் வசமே இருக்க வேண்டும் என்று அதிமுக-வினர் வலியுறுத்தி வருகின்றனர். 

நயினார் நாகேந்திரன் முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்தாலும், அவர் தற்போது தமிழக பாஜக தலைவர் ஆவார். ஜெயலலிதாவை விமர்சித்த ஒரு கட்சியிடம் எம்.ஜி.ஆர். பதிவெண் இருப்பதை அதிமுக-வினர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.