சென்னை ஆயிரம் விளக்கில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 


சென்னை ஆயிரம் விளக்கில் அரசு மாதிரி பள்ளி அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் காவலாளியாக ரகு என்பவர் வேலை பார்த்து வருகிறார்.இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்‌ஷாவுடன் பூங்காவில் உள்ள சிறு அறையில் வசித்து வருகிறார். இதனிடையே உறவினர் ஒருவர் இறப்புக்காக ரகு விழுப்புரம் சென்று விட்டார். பூங்காவில் சோனியா மகளுடன் இருந்துள்ளார். இப்படியான நிலையில்  நேற்று மாலை அச்சிறுமி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் 2 ராட்வெய்லர் நாய்களுடன் வந்துள்ளார். 


பூங்கா உள்ளே இருந்த சிறுமி சுதக்‌ஷாவை 2 நாய்களும் கடுமையாக தாக்கி கடித்துள்ளது. இதனைப் பார்த்த நாயின் உரிமையாளர் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சோனியா நாய்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்றினார். இந்த போராட்டத்தில் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பலத்தா காயமடைந்த சிறுமியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆயிரம் விளக்கு போலீசில் இந்த சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்பட்டது. 


உடனடியாக விசாரணையில் களமிறங்கிய போலீசார், நாயை பூங்காவில் விட்டு விட்டு சென்ற புகழேந்தியை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். குழந்தைக்கான சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறிய நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளை நாய் கடித்தது தொடர்பான வீடியோ வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. பலரும் இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


நாய்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும், வாய்ப்பகுதியில் கவசம் எதுவும் அணியாமலும் இருந்துள்ளார். மத்திய அரசு தடை செய்த ராய்வெய்லர் நாய்களை வளர்ப்பதும், இரண்டு முறை நாய்கள் மற்றவர்களை கடித்த சம்பவமும் நடந்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். 


இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், “தடை செய்யப்பட்ட ராய்வெய்லர் நாய் வளர்த்த விவகாரத்தில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் உரிமம் இல்லாமல் நாய் வளர்த்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இந்த வகை நாய்களை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை. சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.