தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக, மாநிலம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும்  கட்டுப்பாடுகளுடன் ஊரடங்ககை நடைமுறைப்படுத்த மண்டலத்திற்கு ஒரு குழு என மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்க குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.


இக்குழுவில் சென்னை மாநகராட்சியின் சார்பில் உதவி வருவாய் அலுவலர்  மற்றும் உரிமம் ஆய்வாளர் என இரு நபர்கள், காவல்துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் என இரு நபர்கள் மற்றும் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவர் என மொத்தம் 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.




சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து அமைக்கப்பட்ட மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ”சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் இன்று ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில், ஊரடங்கு அமலாக்க குழுவினர் தங்களது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொளள வேண்டும் எனவும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாமல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


9.4.2021 முதல் இதுவரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத நபர்களிடம் இருந்து ரூபாய் 1 கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 390 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில், மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் மூலம் மட்டும் 6.5.2021 முதல் இதுநாள் வரை ரூபாய் 21 லட்சத்து 21 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை மேலும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மண்டலத்திற்கு ஒரு குழு என மேலும் 15 ஊரடங்கு அமலாக்க குழுக்கள் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள் மக்களிடம் அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..