சென்னையில் கால்வாயில் திரியும் மாடுகளின் பாலை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீதிகளில் உலா வரும் மாடுகள்:
கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை அரும்பாக்கத்தில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சாலையில் சென்றுக் கொண்டிருந்த இரு மாடுகள் ஆவேசமாக தாக்கியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாடுகளை இப்படி தெருவில் விடுவதால் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும், உடனடியாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக சென்னை மாநகராட்சி களத்தில் இறங்கியது. அந்த வகையில் திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுவினர் சென்றனர். அப்போது மாடுகளின் உரிமையாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கழிவுநீரை குடிக்கும் மாடுகள்:
அதில் பேசும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பின்னணியில் கழிவுநீர் செல்லும் கால்வாய் ஒன்றில் மாடு ஒன்று நின்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து பேசும் ராதாகிருஷ்ணன், “இங்கு திரியக்கூடிய இந்த மாட்டின் நிலைமையை கொஞ்சம் பாருங்கள். இங்குள்ள கழிவுநீரை குடிக்கும் இந்த மாடுகளின் பாலை ஹோட்டல்களில் வாங்குகின்றனர். பலர் தாங்கள் கறந்த பால் வாங்குகிறோம் என நினைத்து இந்த மாடுகளின் பாலை தான் வாங்குகின்றனர். நாம் வளர்ந்த நகரம் என சொல்கிறோம். ஆனால் நாம் மாடுகளுக்கு எதிராக இல்லை. மாடுகளை வளர்ப்பதற்கான சூழல் இல்லை என்பதை பொதுமக்களும், குறிப்பாக உரிமையாளர்களும் உணர வேண்டும்.
சும்மா விவாண்டாவாதம் பண்ணக்கூடாது. ஒவ்வொரு மாட்டுக்கும் சரியான பராமரிப்பு என்பது உள்ளது. அதே மாதிரி மற்றொரு பக்கத்தில் இருக்கும் மரக் கழிவுகளை சுட்டிக்காட்டி, வீட்டில் இருக்கும் இதுபோன்ற குப்பைகளை எல்லாம் தெருவில் கொட்டு விடுகிறார்கள். அதன்பிறகு இதனை அப்புறப்படுத்துவது மாநகராட்சி ஊழியர்களின் பணியாக மாறி விடுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும். தினமும் 6100 மெட்ரிக் டன் குப்பையை அப்புறப்படுத்தி வருகிறோம். வளரும் மாநகரத்தில் இருக்கும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.