கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் உட்பட முக்கிய அதிகாரிகள் ரிப்பன் மாளிகையில் மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நாளை முதல் பொதுமக்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ள நிலையில் மண்டல வாரியாக அலுவலர்கள் இன்று கள ஆய்வு மேற்கொள்கின்றனர்


இது தொடர்பாக செய்தையாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “ நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வீடு தேடி விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் எந்த பகுதிக்கு எப்போது சமர்ப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக அறிவிப்பு ரேஷன் கடைகளில் ஒட்டப்படும். முதற்கட்ட விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை நடைபெறும். முதல் கட்டத்தில் 98 வார்டுகளிலும் (703 ரேஷன் கடைகள்), 2 ஆம் கட்டத்தில் 102 வார்டுகளிலும் (725 ரேஷன் கடைகள்) விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.


மேலும், “ தன்னார்வளர்களுக்கான பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உதவி மையமும் அனைத்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேவையான விண்ணப்பங்கள் கையிருப்பில் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்றால் கூட அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டல் வாரியாக தொலைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ரதோர், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.