காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சமைத்த உணவை மீண்டும் சமைத்து தருவதாக எழுந்த புகாரின் பேரில் உணவு விற்பனைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் தடை விதித்து, ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தி விற்பனை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகரில் கடந்த சில மாதங்களாகவே, எண்ணற்ற சாலை ஓரக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுகள் தரமற்ற முறையில் தயாரித்து, உணவு பிரியர்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன், காவலன் கேட் பகுதியில், உள்ள உணவகம் ஒன்று, உணவகத்தில் நேற்று சமைத்த உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்வதாக வாட்ஸ்அப் மூலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் தெரிவித்தார்.
ரூபாய் 2000 அபராதம்
இதனை அடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து, அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது நேற்று சமைத்த உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருந்ததும், உணவகத்தை அசுத்தமாக வைத்திருந்ததாகவும், அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்கு மாநகராட்சி சார்பில் ரூபாய் 2000 அபராதம் விதித்தனர்.
ஒரு நாள் உணவு விற்பனைக்கு தடை
மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று ஒரு நாள் உணவு விற்பனைக்கு தடை செய்து, உணவகத்தை தூய்மைப்படுத்திய பின்பு மீண்டும் விற்பனைக்கு ஆய்வுக்குப் பின் அனுமதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளை துவங்க உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த , இந்த உணவகம் தரமற்ற முறையில் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் சாலையோர உணவகங்களையும் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா எச்சரிக்கை
இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டார உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருப்போரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, அனுராதா கலந்து கொண்டு உணவு வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் வியாபாரிகளிடம் பேசும்போது, அனைத்து ஹோட்டல்களிலும் அமர்ந்து உண்ணும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது போல சமையல் கூடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் .
உரிமம் மற்றும் சான்றிதழ்கள் அவசியம்
ஒரு நாள் தயாரித்த உணவை மறுநாள் உபயோகப்படுத்தக் கூடாது. அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் சான்றிதழ்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று உணவு வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த கூட்டத்தில் திருப்போரூர் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து உணவு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.